டிரம்பின் வித்தியாசமான குரல்
உலக பொருளாதார மன்ற கூட்டத்தின் 54-வது மாநாடு டாவோஸ் நகரில் கடந்த 20-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை நடந்தது.;
சென்னை,
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்ற கூட்டத்தின் 54-வது மாநாடு கடந்த 20-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை டாவோசில் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் உள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து உலக தலைவர்கள், வணிக நிறுவன அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் வல்லுனர்கள் ஒன்றாக சந்தித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டத்துக்கு ஒரு கருபொருளை மையமாக வைத்தே விவாதங்கள் நடைபெறும்.
இந்த ஆண்டு 130 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் தொழில்துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர். மாநாட்டில் பல்வேறு நாடுகளில் உள்ள மாநில முதல்-மந்திரிகளும், மந்திரிகளும் கலந்து கொண்டனர். அவர்களெல்லாம் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்குவதற்கு என்னென்ன வாய்ப்புகள், வசதிகள் இருக்கின்றன? அரசு சார்பில் என்னென்ன சலுகைகள், ஊக்கங்கள் வழங்கப்படும்? என்பதை விளக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஒரு பாதையை வகுத்துவிடுவார்கள். அந்தவகையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது பொருளாதார மாநிலமாக வளர்ச்சி பெற்று இருப்பதை குறிப்பிட்டு, ஒட்டுமொத்த நாட்டில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகிறார்கள் என்று சொன்னது உலக அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்புகள் வழங்கி உற்பத்தி தொடங்கியிருப்பதை தான் கலந்துகொண்ட 50-க்கு மேற்பட்ட உலக நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பின்போது விளக்கி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். இதேபோலத்தான் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் தங்கள் நாடுகளில் தொழில் தொடங்க உகந்த சூழ்நிலை இருப்பதை விளக்கி, தொழில் தொடங்க அழைப்பு விடுத்தனர். ஆனால் காணொலி மூலம் இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குரல் மிக வித்தியாசமாக இருந்தது. அவர் யாரையும் அமெரிக்காவில் தொழில் தொடங்க என்னென்ன சலுகை தருவேன் என்று கூறாமல், 'வாருங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க! உங்கள் பொருட்களை அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் உலகில் மற்ற நாடுகள் எங்கும் இல்லாத அளவுக்கு மிக குறைந்த வரி இருக்கும். அப்படி நீங்கள் அமெரிக்காவில் உற்பத்தியை தொடங்க வரவில்லையென்றால், அது உங்கள் விருப்பம். மிக எளிமையாக சொல்கிறேன். நீங்கள் மிக அதிகமாக வரியை கட்டவேண்டியது இருக்கும். அது எங்கள் கஜானாவை நிரப்பும்' என்று ஒரு அதிகார குரலில், வித்தியாசமான முழக்கத்தை முன்மொழிந்தார்.
இதுமட்டுமல்லாமல் 'சவுதி அரேபியா இப்போது 600 பில்லியன் டாலர் (ரூ.51 லட்சம் கோடி) முதலீடை அமெரிக்காவில் மேற்கொள்ளும்' என்று பட்டத்து இளவரசர் தெரிவித்து இருக்கிறார். 'அதை ஒரு லட்சம் கோடி டாலர் (ரூ.86 லட்சம் கோடி) முதலீடாக உயர்த்தவேண்டும் என்றும் கூறிவிட்டு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அதன் விலையை குறைக்கவேண்டும்' என்றும் இந்த மாநாட்டில் பேசினார். பதவியேற்று 3 நாட்களே ஆன நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் இந்த பேச்சு அனைவரையும் வியப்படைய செய்ததோடு மட்டுமல்லாமல், எல்லோருடைய பேச்சையும் விட வித்தியாசமானதாக இருந்தது.