நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி!
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை,
நாடாளுமன்றத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக்கொண்ட மக்களவையும், மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக்கொண்ட மாநிலங்களவையும் இருக்கின்றன. இரு அவைகளும், நாட்டு மக்களுக்கு தேவையான முக்கிய விவாதங்களை நடத்துவதிலும், சட்டங்களை நிறைவேற்றுவதிலும் பெரும் பங்காற்றிவருகின்றன. ஒவ்வொரு உறுப்பினரும், தங்கள் மாநில பிரச்சினைகள் மற்றும் தங்கள் தொகுதி பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட மந்திரிகளின் கவனத்துக்கு கொண்டுவர அவையில் கூட்டங்கள் நடந்தால் மட்டுமே முடியும்.
அந்த வகையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் இந்த மாதம் 20-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், தங்கள் உறுப்பினர்கள் அவையில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்பவேண்டும்? என்றெல்லாம் முடிவு செய்து ஆலோசனைகளை வழங்கியிருந்தன. ஆனால், அவையில் நடந்தது வேறு. கடந்த வாரத்தில் கூட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எந்த அலுவலும் நடக்காமல், அமளியிலேயே முடிந்திருக்கிறது. மக்களவை 54 நிமிடங்களும், மாநிலங்களவை 75 நிமிடங்களும் மட்டுமே நடந்துள்ளது.
தொடக்க நாளிலேயே அதானி பிரச்சினை, சம்பல் - மணிப்பூர் கலவரங்கள் குறித்து, அவையை ஒத்திவைத்து விவாதிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவையை நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், வேறு வழியில்லாமல் சபாநாயகர் அவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், முதல் நாளிலேயே கூட்டம் தொடங்கிய 6 நிமிடங்களில் மக்களவையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல், மாநிலங்களவையும் 33 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை அரசியல் சாசனம் வகுக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியதை கொண்டாடும் வகையில், இரு அவைகளின் கூட்டு கூட்டம் நடந்தது. தொடர்ந்து புதன்கிழமை மீண்டும் அவை கூடியதும், முதல் நாள் போலவே அதே கோரிக்கைகளை அவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. அன்றைய தினமும் மக்களவையை 14 நிமிடங்களிலும், மாநிலங்களவையை 13 நிமிடங்களிலும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்பு வியாழக்கிழமையன்று மக்களவை 14 நிமிடங்களும், மாநிலங்களவை 13 நிமிடங்களும் அமளியிலேயே நடந்து முடிந்தது. மீண்டும் வெள்ளிக்கிழமை இரு அவைகளும் கூடியதும் இதேநிலையே தொடர்ந்தது. மக்களவை 20 நிமிடங்களும், மாநிலங்களவை 13 நிமிடங்களும் மட்டுமே கூடி, மீண்டும் கடும் அமளிக்கிடையே கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
2 நாள் விடுமுறைக்கு பிறகு, இன்று (திங்கட்கிழமை) மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட இருக்கிறது. இதற்கிடையே கடந்த வாரம் வியாழக்கிழமையன்று, வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான பிரியங்கா கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்திக்கொண்டு பதவியேற்றார். அவரும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை பேசமுடியாமல், எதிர்ப்பை காட்டிக்கொள்வதற்கே நேரத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த வாரமும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்குமா? அல்லது இதுபோல எந்த அலுவலும் நடக்காமல் அமளியிலேயே முடிந்துவிடுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
உடனடியாக இரு அவை தலைவர்களும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தைக்கூட்டி ஒரு சுமுக முடிவை எடுத்து, மக்கள் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதிக்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. எந்த விவாதமும் இல்லாமல் நாடாளுமன்றம் அமளியிலேயே முடிவதால் நாட்டுக்கு எந்த பயனுமில்லை.