தவெக தலைவர் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். தவெக மாநாடு நடைபெறும் நிலையில் வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் பிரபு ஆதரவு
ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். தவெக தலைவர் விஜய்க்கு, எனது தந்தை ஆசியும் எனது ஆதரவும் உண்டு என்று நெல்லையில் நடிகர் பிரபு கூறினார்.
வேலை போனாலும் பரவாயில்லை...மாநாட்டிற்கு வந்த இளைஞர்
தவெக மாநாட்டிற்கு செல்ல அலுவலகத்தில் விடுமுறை கேட்டேன், ஆனால் நிறுவனத்தில் விடுப்பு தர மறுத்தார்கள், மீறி எடுத்தால் வேலையை விட்டு நீக்குவேன் என கூறினார்கள், நீக்கிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு அப்படியே இங்கு வந்துவிட்டேன் என்று மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.
கேரவனில் தங்கிய விஜய்..
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி திடலுக்கு நேற்றிரவு சென்ற விஜய் கேரவனில் தங்கினார். புதுச்சேரி, விழுப்புரத்திற்கு சென்று தங்குவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் கேரவனிலேயே தங்கி மாநாட்டு பணிகளை கவனித்து ஆலோசனை வழங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு
மாலை 4 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தவெக மாநாடு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 3 மணிக்கே தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தொண்டர்கள் அட்டூழியம்
மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்கள் விஜய்யின் பாடல்கள் முழங்க வாகனங்களின் மேற்கூரையில் ஆடியபடி இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டது காண்போரை பதைபதைக்க வைத்தது.
தவெக மாநாட்டிற்காக வரும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 10 கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தவெக செயல் திட்டம் - புதிய தகவல்
ஆட்சி அமைத்தால் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்படும் என தவெக செயல்திட்டம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு துறைகளில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் நிறைந்தவையாக செயல்திட்டங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை
விஜய் மாநாட்டுக்கு வந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட நபருக்கு அங்கு இருந்த மருத்துவர் குழு சிபிஆர் சிகிச்சை அளித்தனர். மாநாட்டு திடலில் காலை முதலே ஏராளமானோர் குவிந்து வரும் சூழலில் குடிநீரின்றி பலர் மயக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக மாநாட்டில் என்ன பேசப்போகிறார் விஜய்?
தவெக மாநாட்டில் விஜய் நிகழ்த்தும் உரையில் எந்த தலைவர்கள் பற்றியும், தனிப்பட்டவர்கள் பற்றியும் தாக்குதல் எதுவும் இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது. ஊழலுக்கு எதிராக நிறைய கருத்துகள் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.