பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் மத்திய மந்திரி ஆய்வு

பாம்பன் புதிய ரெயில் பாலத்தை மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-12-23 18:12 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக இன்று மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.

பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார். பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்