நாட்டில் தமிழகம், குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இந்நிலையில், எச்.எம்.பி.வி. தொற்று பாதிப்புகளை தொடர்ந்து திருப்பதி வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் முக கவசம் அணிந்து வர அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சொர்க்கவாசல் திறப்புக்கு அதிக பக்தர்கள் வரக்கூடும் என்பதற்காக கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வேகமாக பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அருகில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. மேற்குப் பகுதியில், நேற்று காலை பரவத் தொடங்கிய தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்தது. மலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் காட்டுத் தீ சூழ்ந்ததால் பல வீடுகள் கருகின. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல் லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் உள்ள மலையடிவாரத்திலும் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: முதலமைச்சரின் பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கியபோது பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.கவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் அப்போதைய அ.தி.மு.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினார். முதல்-அமைச்சரின் பேச்சுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
கவன ஈர்ப்பு தீர்மானம்- முதலமைச்சர் பதிலுரை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். அப்போது, மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை கொடூரமானது என்று கூறிய அவர், சம்பந்தப்பட்ட குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.
குற்றவாளியை கைது செய்யாமல் விட்டிருந்தால் அரசை குறை கூறலாம் என்றும், இந்த விஷயத்தில் மலிவான அரசியலில் ஈடுபடவேண்டாம் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்.. சஜ்ஜன் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு
1984-ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று தீர்ப்பு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் அவையில் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது விவாதம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை பயன்பெறாதவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற நடவடிக்கை எடுப்போம்.
திட்ட விதிக்கு உட்பட்டு கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொங்கல் தொகுப்பு விநியோகம்; நாளை தொடக்கம்
ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார்.
நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,225-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சட்டசபைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை
3வது நாள் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது . சட்டசபைக்கு இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர் . அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.