தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.;
சென்னை,
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களிடமிருந்து ஒரு விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் கைது செய்யப்பட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;
"தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதால், அவர்களின் குடும்பங்கள் மிகுந்த துயரத்தில் உள்ளன. வெளியுறவு அமைச்சகத்தின் தலையீட்டின் மூலம், கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.