'மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வராது' - அமைச்சர் மூர்த்தி
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வரவே வராது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.;
மதுரை,
மதுரை மேலூர் அருகே அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட மேலூர் பகுதியிலுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விவசாயிகள், மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வரவே வராது என அமைச்சர் மூர்த்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை அரிட்டாபட்டியில் அவர் பேசியதாவது;-
"இது ஒரு ஜனநாயக நாடு. மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் சரி, நிரந்தரமாக நிறுத்தி வைத்தாலும் சரி. மக்கள் சக்திக்கு முன்னாள் யாரும் வென்றுவிட முடியாது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வரவே வராது. இந்த செய்தியை மக்கள் மத்தியில் தெரியப்படுத்துமாறு முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்."
இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.