தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.;

Update:2025-01-10 05:01 IST

சென்னை,

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்திற்கான டோக்கன்களை ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கினர்.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை வேளச்சேரி பிரதானசாலையில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி - சேலை வினியோகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 37 ஆயிரத்து 224 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி - சேலைகள் வழங்கும் பணி தொடங்கியது. கூட்டுறவுத்துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கைத்தறித்துறையை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்