மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா: கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பம்
மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் கடந்த பிப்ரவரியில் பட்ஜெட் உரையின்போது, திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பார்க் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காவை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழக அரசிடம் டைடல் லிமிடட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
திருச்சியில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் கிராமம் அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்துக்கு அருகே புதிதாக டைடல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் ரூ.315 கோடி செலவில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 6 தளங்களுடன் கூடிய புதிய டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது
அதுபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் அந்த டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.