சினிமாவை பிரபலப்படுத்த படத்துக்கு தடை கோருவது வாடிக்கையாகிவிட்டது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
ஏராளமான பணத்தை செலவு செய்து தயாரிக்கும் சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தொடருவது ஏற்புடையதல்ல என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் நேற்று விடுமுறைகால கோர்ட்டு செயல்பட்டது. இதில் நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்குகளை விசாரித்தது. அப்போது சில வக்கீல்கள் ஆஜராகி, நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்த 'சொர்க்கவாசல்' என்ற சினிமா படம் ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாகிறது. இந்த படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதனால் அவரை பின்பற்றுபவர்களை இந்த சினிமா, அவமதிப்பதாக கருதப்படுகிறது. எனவே இந்த சினிமாவுக்கு தடை விதிக்க கோரும் மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என கோரி முறையிட்டனர்.
அதற்கு நீதிபதிகள், பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் சினிமாவுக்கு மதுரை ஐகோர்ட்டு எப்படி தடை விதிக்க முடியும்? சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்வது, இந்த வழக்கின் மூலம் சினிமாவை பிரபலப்படுத்துவது போன்றவை இப்போது வாடிக்கையாகிவிட்டது என கருத்து தெரிவித்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், ஏராளமான பணத்தை செலவு செய்து தயாரிக்கும் சினிமாவுக்கு தடை கோரி வழக்கு தொடருவது ஏற்புடையதல்ல. இந்த கோரிக்கை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டினை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.