தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் விஜயகாந்த் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை,
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு வந்து விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.