கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா

மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த். இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

Update: 2024-12-28 14:40 GMT

சென்னை.

விஜயகாந்த் குருபூஜை விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த், இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார். என்றும் விஜயகாந்துக்கு விசுவாசமாக இருப்போம். கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. விஜயகாந்த் குருபூஜை நிகழ்வுக்கு ஒத்துழைப்பு தந்த காவல் துறைக்கு நன்றி" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "விஜயகாந்த் நிச்சயம் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் எங்கள் நாளை தொடங்குகிறோம். வரும் காலம் கேப்டன் ஆசிர்வாதத்தால் தமிழகத்துக்கு நல்லதே நடக்கும்.

முறையாக காவல்துறையை அணுகி அமைதி பேரணிக்கு பல முறை அனுமதி கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் அமைதியான முறையில் பேரணியை நடத்தி முடித்துள்ளோம். சட்டம் ஒழுங்கு தவறி நாங்கள் நடக்கமாட்டோம். அப்படித்தான் கேப்டன் எங்களை வழிநடத்தி உள்ளார். சட்டம் ஒழுங்குக்கு எந்த ஒரு சீர் முறைகேடும் இல்லாமல் பேரணியை நடத்தியுள்ளோம். அதற்காக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்றைக்கும் கேப்டனுக்கு விசுவாசமாக இருப்போம்.

கேப்டனின் கனவும் கொள்கையும் நினைவாக உறுதிமொழி ஏற்றுள்ளோம். கேப்டனின் மறைவின் போது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்து தரப்பு மக்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 முறை வந்தார். உதயநிதி வந்தார். அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். அரசு மரியாதையுடன் இறுதி மரியாதையை செய்தோம். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுகொண்டதால் அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம்.

பேரணிக்கு அவர்களே அனுமதி கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். வேறு வழியில்லாமல் நாங்களே பேரணி நடத்தினோம். திமுக, அதிமுக தலைவர்களுக்கு அமைதி பேரணி செல்ல அரசு அனுமதி கொடுக்கிறது. ஆனால் இந்த அமைதி பேரணிக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை. அரசாங்கமே அனுமதி கொடுத்திருந்தால் இந்த அரசாங்கத்தை மக்கள் இன்னமுமே கொண்டாடியிருப்பார்கள். கூட்டணியில் இல்லை என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா? இல்லை மக்கள் கூட்டம் அதிகரித்துவிடும் என்பதால் தரவில்லையா என்று தெரியவில்லை. இனி வரும் காலமும் அன்னதானம் தொடரும். இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை அன்னதானம் தொடரும். அதில்தான் கேப்டனின் ஆன்மா இருக்கிறது" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்