29-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யார் அந்த சார்? என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.
குமரியில் 3 நாட்கள் நடைபெற இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2 நாட்களாக குறைக்கப்படுகிறது. டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்படுகிறது. இதனால், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும். டிசம்பர் 30, 31 என 2 நாட்கள் நிகழ்வுகள் நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் சாக்லேட் பெட்டிகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2,447 உயிருள்ள அபூர்வ ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்து இளைஞர்களுக்கும் ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என தூத்துக்குடியில் மினி டைடல் பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா - சென்னையில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
வெள்ளிவிழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும், அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை. நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலத்தை நான் திறந்து வைக்கவிருக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்ஆப்பிரிக்க அணி. செஞ்சூரியனில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
குமரியில் காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடும் தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம் என தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அம்பேத்கர் பிறந்த ஊரான மத்திய பிரதேசத்தின் மோவ் நகரில் உள்ள அவரது சிலைக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினர்.