புத்தாண்டு கொண்டாட்டம்: ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்துள்ளனர்.
ஊட்டி,
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது சீசனும் நடக்கிறது. இந்த சமயங்களில் தினசரி 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள்.
இந்த நிலையில், அடுத்த 3 நாட்களில் புத்தாண்டு பிறக்க இருப்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்று அதிகரித்துள்ளது. அங்கு கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலர்கள், ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலைப்பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரிய புல்வெளி மைதானத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் ரசித்து வருகின்றனர்.
இதேபோல் கர்நாடகா தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான கர்நாடக பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். காட்சி மேடையில் நின்ற படி ஏரியின் அழகை பார்வையிட்டனர். படகு இல்ல சாலையில் குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
ஜனவரி 7-ந் தேதி வரை ஊட்டியில் தங்கும் விடுதிகளில் அறை முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்கும் நட்சத்திர விடுதிகளில் இடம் கிடைக்காததால் ஒரு சில சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.