போதைப் பொருள் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி
போதைப் பொருள் வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.;
சென்னை,
போதைப் பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில் கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில், காட்டாங்கொளத்தூர் பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா ஆயில் டப்பாக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை தனிப்படை போலீசார், காட்டாங்கொளத்தூர் சென்று அறையில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள எண்களைக் கொண்டு தனிப்படை போலீசார் தொடர்ந்து துப்பு துலக்கினர். இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) செல்போன் எண்ணும் இருந்தது. இதனையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தன்னிடம் இருந்து எந்த போதைபொருளும் பறிமுதல் செய்யபடாத நிலையில் தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு (30-ம் தேதி) தள்ளி வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் ஜாமீன் மனுவை தள்ளுபடி சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறையின் வாதத்தை ஏற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.