சென்னை மலர் கண்காட்சிக்கான கட்டணம் உயர்வு
மலர் கண்காட்சி ஜனவரி 18-ந்தேதி வரை நடக்கிறது;
சென்னை,
சென்னை, தேனாம்பேட்டை கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் வேளாண்மை - உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4-வது சென்னை மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.இன்று தொடங்கிய மலர் கண்காட்சி ஜனவரி 18-ந்தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரெயில், படகு, கார் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கண்காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மலர் கண்காட்சியை காணவரும் பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்களுக்கு ரூ.100, கேமரா எடுத்து வந்தால் ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்தாண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் கண்காட்சியை காண வரும் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .