பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 44 மாதகால திமுக ஆட்சியில் தமிழகம் குற்ற பூமியாக மாறிவிட்டது என்பது நாள்தோறும் நடைபெற்று வரும் சம்பவங்களில் இருந்து உறுதியாவது வேதனை அளிக்கிறது. போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் முதல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் காமக்கொடூர குற்றவாளிகள் வரை, பலர் ஆளும் திமுக-வைச் சார்ந்தவர்களாக இருப்பதும்; அவர்களைக் காப்பாற்ற இந்த விடியா ஆட்சியாளர்கள் முயல்வதும் கொடுமையானது.
தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் நாள்தோறும் பெருகி வருவது, அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளது. கடந்த வாரம் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கைது செய்யப்பட்டவர், திமுகவைச் சேர்ந்த நிர்வாகி என்று செய்திகள் வந்த நிலையில், அவருடன் பேசிய 'யார் அந்த சார் ?' என்பதை இதுவரை இந்த ஆட்சியாளர்கள் கண்டுபிடிக்காததை ஊடங்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்பிய சூழ்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அதிமுக சார்பில் மாநிலம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திவரும் சூழ்நிலையில், 'உண்மைக் குற்றவாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று பாதிக்கப்பட்ட மாணவிக்கு உறுதி அளிக்காமல்', எங்களுக்கு பதில் அளிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளனர் சில திமுக அமைச்சர்கள்.
விடியா தி.மு.க-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சி இருக்கும் வரை யாருக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இருக்காது என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை தமிழக மக்கள் இழந்துவிட்டார்கள். எனவே, பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது தற்காப்புக்கான Spray, Emergency SOS Alarm உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டில் இப்படியொரு நிலை வந்ததற்கு, உங்களைப் போன்றே நானும் வருந்துகிறேன்.
பெண்களுக்கு எதிராக இத்தனை கொடூரங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடைபெறுவதாக, தினமும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரும்போது, காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மவுன சாமியாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 'பெண்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு பேட்டியளிக்கும் அமைச்சர்கள், தமிழகத்தில் தினமும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் எங்களுக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் காமுகர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.