கைது செய்யப்பட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுவிப்பு

கைதான தமிழக வெற்றிக் கழக கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரும் விடுவிக்கப்பட்டனர்.;

Update: 2024-12-30 12:26 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்தும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வலியுறுத்தியும் பா.ஜ.க. , அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தியிருந்தன.

இந்த சூழலில் நடிகர் விஜய் இந்த சம்பவத்தை கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். இருந்தபோது அவர் இன்று காலை தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், "அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" என்று அந்த கடிதத்தில் விஜய் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் நகலெடுத்து கல்லூரிகள் மாணவிகள், பொதுமக்களிடம் வழங்கி வந்தனர். அது போல் சென்னையில் பல்வேறு இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கி வந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் இது போல் வழங்கக் கூடாது என தடுத்தனர். ஆனால் தடுத்தும் அதை மீறி அவர்கள் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். அந்த வகையில் பூக்கடையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு நோட்டீஸ் வழங்கிய பெண் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து திநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

இந்த சூழலில் த.வெ.க. தொண்டர்களை கைது செய்து வைத்திருக்கும் மண்டபத்திற்கு வந்து போலீசாரிடம் , அவர்களை விடுவிக்குமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த போலீசார், அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டியதால் அவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக, அனுமதியின்றி பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாக கைதான த.வெ.க. கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரும் விடுவிக்கப்பட்டனர். தனியார் மண்டபத்தில் இருந்து வெளியே வந்த ஆனந்த், கைதை வன்மையாக கண்டிப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைவர் விஜய், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அவருடன் புஸ்ஸி ஆனந்தும் சென்றிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்