ஜனநாயக ரீதியில் போராடுவோரின் குரல்வளையை நசுக்குவதுதான் திராவிட மாடலா? - டி.டி.வி. தினகரன்

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்துவதில் முதல்-அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;

Update: 2025-01-02 08:18 GMT

கோப்புப்படம் 

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடும் எதிர்கட்சியினரை தொடர்ந்து கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே வள்ளுவர்கோட்டத்தில் போராட முயன்ற பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த காவல்துறை, தற்போது பா.ம.க.வினரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொரானோ காலகட்டத்திலும் கூட, தன் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக தனது இல்லத்தில் தொடங்கி பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து நாடகமாடிய மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரான பின்பு, ஜனநாயக ரீதியிலான எதிர்க்கட்சிகளின் அறவழிப் போராட்டத்திற்குக் கூட அனுமதி மறுப்பதும், காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்தி அடக்குமுறையை கையாள்வதும்தான் தி.மு.க. கூறும் திராவிட மாடலா ?

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்படி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பாதுகாப்பதிலோ, வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்க நினைப்பதன் மூலம் வழக்கின் விசாரணையை மூடி மறைக்க முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள பா.ம.க.வினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் செலுத்தும் கவனத்தை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்துவதிலும் செலுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்