சென்னை காவல் ஆணையர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை சென்னை ஐகோர்ட்டு அமைத்தது.
சென்னை,
சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 21ம் தேதி என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், சொந்த ஊர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுவை அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை. மாணவியின் அடையாளத்தை எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு. செய்தியாளர் சந்திப்பு நடத்த அரசிடம் சென்னை காவல் ஆணையர் அனுமதி பெறவில்லை. சென்னை காவல் ஆணையர் அருண் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு குற்றம் நடைபெற்றால் அதில் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறார். ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மீது குற்றம் சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகிவிடும்.
தனிப்பட்ட முறையில் பேசுவது ஒன்றும் தவறு இல்லை. அது அவர்களுக்கான உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆண் என்பதற்காக, பெண்களை தொட உரிமை இல்லை. பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை இந்த சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் புகார் அளித்த மாணவியின் துணிச்சல் பாராட்டத்தக்கது. பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஒரு பெண் தன் விருப்பப்படி ஏன் காதல் செய்யக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது? ஒவ்வொரு ஆணும், பெண்ணுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானது ஏற்றுக்கொள்ள முடியாதது, துரதிர்ஷ்டமானது. பாதிக்கப்பட்ட மாணவியின் படிப்பு முடியும்வரை அவரிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக மாநில அரசு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்ததால் மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியே கசியாமல் அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அண்ணா பல்கலைக் கழக பாதுகாப்பை மேம்படுத்தவும் அறிவுறுத்தினர்.
மேலும், 'நாங்களும் திருமணத்திற்கு செல்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி என்றால் அவர்களுடன் எங்களுக்கும் தொடர்பு என அர்த்தமா? யாருடன் யார் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை' என்று குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துள்ளதாக கூறப்பட்ட வாதத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு
அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆவடி துணை ஆணையர் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.