மன்மோகன் சிங் ஆட்சியில் செழித்த தமிழ்நாடு: ஆ.ராசா பெருமிதம்

மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங் என்று ஆ.ராசா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-12-28 06:22 GMT

சென்னை,

திமுக எம்.பி. ஆ.ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, பல கோடி குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்த பொருளாதார மீட்பர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். 1990-களில் பொருளாதாரம் திக்கற்ற நிலையில் கிடந்த போது தாராளமயமாக்கல் கொள்கையைத் துணிச்சலோடு அமல்படுத்தி, இந்தியாவை எட்டுக்கால் பாய்ச்சலில் பயணிக்க வைத்தவர்.

திமுக அங்கம் வகித்த 2004 -2014 ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எண்ணற்ற திட்டங்களைத் தமிழ்நாட்டிற்கு வழங்கினார். நிதி, நெடுஞ்சாலை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம் எனப் பல முக்கிய துறைகளை பெற்று, தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை மன்மோகன் சிங் ஆட்சியின் போது கொண்டு வந்தோம். இவ்வாறு மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழ்நாடு செழித்தது.

பத்தாண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுக உள்ளிட்ட 21 தமிழர்கள் மத்திய மந்திரிகளாக இடம் பெற்றனர். 8 கேபினட் மந்திரிகள், 13 இணை மந்திரிகள் என மிக அதிக அளவில் தமிழர்கள் கோலோச்சினார்கள். இன்றைக்கு மோடி அமைச்சரவையில் தமிழர்கள் நிலை என்ன என எண்ணிப் பார்த்தால், இந்த மகத்தான சாதனையை உணர முடியும். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசு அமைந்தால், அதன் ஆட்சி அதிகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் இடம் பெற்றால், என்னவெல்லாம் நற்காரியங்கள் நடக்கும் என்பதற்கான சான்றுகள் மன்மோகன் சிங் ஆட்சியின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்.

"இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பது எனது கல்வியால் தீர்மானிக்கப்பட்டது" என்றார் மன்மோகன் சிங். கல்விதான் ஒட்டு மொத்த சமூகத்தையும் முன்னேற்றும் ஆயுதம் என அதன்படியே தன் வாழ்வை அமைத்து, அதன் வழியே நல்லாட்சி நல்கி இன்று நம்மை விட்டுப் பிரிந்துள்ளார் மன்மோகன் சிங்.

'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்' என்ற ஔவையின் வாக்கில், மாசறக் கற்றவனே மன்னனாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி மாநில உரிமைகளையும், மக்களையும் மதித்து ஆட்சி புரிந்தவர் மன்மோகன் சிங். அவரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வரலாறு என்றும் அவரை நினைவில் வைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்