திருத்தணி முருகன் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-12-27 18:00 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதியம் தனது மனைவி லட்சுமியுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார்.

அவரை கலெக்டர் பிரபுசங்கர் வரவேற்றார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் சிறப்பு வழியில் சென்று ஆபத்சகாய விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகர் சன்னதிகளில் கவர்னர் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டார்.

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் மற்றும் நினைவு பரிசாக திருத்தணி முருகன் புகைப்படத்தை கோவில் இணை கமிஷனர் ரமணி வழங்கினார். கவர்னர் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் திருத்தணி நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், "கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி, தமிழ்நாட்டு சகோதர சகோதரிகளின் சமூக நல்லிணக்கம், அமைதி, வளம் மற்றும் நல்ல ஆரோக்கியம் வேண்டி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசித்து பூஜை செய்தனர்" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்