தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை: ஜி.கே.வாசன்
சட்டம் ஒழுங்கில் செயலற்ற தன்மையை கைவிட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்;

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு, சட்டம் ஒழுங்கில் செயலற்ற தன்மையை கைவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட பிறகும் இக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சிக்குரியது. அது மட்டுமல்ல இது சம்பந்தமாக வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் காவல் துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் கொலைச் சம்பவம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம்.
ஆனால் புகார் சம்பந்தமாக, வீடியோ சம்பந்தமாக உரிய நடவடிக்கையை உடனே எடுக்க தவறிய காவல் துறையினரின் மெத்தனப்போக்கால் கொலை நடந்திருப்பது கொடுமையிலும் கொடுமை. முன்னாள் காவல் துறை அதிகாரிக்கே இந்நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கான பாதுகாப்பில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன.
இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கில் தமிழக அரசு முறையான, சரியான நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது தான். மேலும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை அவ்வப்போதே எடுப்பதில்லை.
புகார் அளிக்கப்பட்ட உடனேயே அது குறித்து உரிய விசாரணை நடத்தி, கண்காணிப்பை மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது தமிழக காவல் துறையினரின் கடமை.
எனவே முன்னாள் காவல் துறை அதிகாரியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தமிழக அரசு, மாநிலம் முழுவதற்குமான காவல் துறையினரின் நடவடிக்கைகளை கண்காணித்து, தொடர்ந்து சட்டம் ஒழுங்கில் முறையான சரியான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .