சென்னை: ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்ட இளைஞர்... பலர் கடும் அவதி
ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்ட இளைஞரால் பரபரப்பான சூழல் நிலவியது.;
சென்னை கொருக்குப்போட்டை வழியாக ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது பையை ரெயிலில் உள்ள அபாயச் சங்கிலியில் தொங்க விட்டுள்ளார். இதனால் ரெயில் உடனடியாக கொருக்குப்பேட்டையில் நிறுத்தப்பட்டது.
இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்தனர். அப்போது அந்த வட மாநில இளைஞர் விசாரணைக்கு பயந்து ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடியதாக அங்கு இருந்தவர்கள் அதிகாரிகளிடன் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் 45 நிமிடங்கள் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அந்த ரெயிலில் பயணித்த நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
இந்த ரெயில் செல்வதற்காக அப்பகுதியில் கேட் அடைக்கப்படிருந்தது. இதனால் பல வாகன ஓட்டிகளும் இந்த சம்பவத்தால் பெரும் அவதி அடைந்தனர். இதனையடுத்து ரெயிலின் அபாயச் சங்கிலியில் பையை தொங்கவிட்ட வட மாநில இளைஞரை ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.