ராமேஸ்வரம் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
ராமேஸ்வரம்,
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைய இருக்கிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசும் என்பதால் மீன்வளத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டு படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன