மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத்தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
அதேவேளை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சாரோசின் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. ஜார்ஜ் சாரோஸ் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க. அவரது நிறுவனத்துடன் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென மாநிலங்களவையில் பா.ஜ.க. இன்று கோரிக்கை விடுத்தது. அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்.பி.க்களும், ஜார்ஜ் சாரோஸ் நிறுவனத்திற்கும் சோனியா காந்திக்கும் இடையேயான தொடர்பை விசாரிக்க வேண்டுமென பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி எம்.பி.க்களும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளர்.
முன்னதாக அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியபோது, காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஜார்ஜ் சாரோசுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறிய குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்திய ஜே.பி.நட்டா, இந்தியாவை சீர்குலைக்க பில்லியன் கணக்கான டாலர்களை கோடீஸ்வரர் வழங்குகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து தொடர் அமளிக்கு மத்தியில் அவையை தலைவர் தன்கர் இன்று நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.