முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

முடிச்சூர் ஆம்னி பஸ் நிலைத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2024-10-22 22:13 GMT

சென்னை,

முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்தை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தலைவருமான சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கிளாம்பாக்கம் பஸ்நிலையம் அருகே 16 ஏக்கர் பரப்பளவில் தொல்லியியல் துறை அனுமதியோடு ஒரு காலநிலை பூங்கா உருவாக்குவதற்கான பணியை தொடங்கினோம். ரூ.15 கோடி செலவில் இந்த காலநிலை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு பகுதியாகவும், மக்களுக்கு காலநிலை பூங்கா என்றால் என்ன என்று விளக்குகின்ற வகையிலும், மக்களின் தேவைக்கேற்ப புதிய விஷயங்களை பரிணாம வளர்ச்சிகளை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையிலும் இங்கு பலதரப்பட்ட செடிகள், காடுகள் போன்றவையும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சிறுவர் விளையாட்டு பூங்கா, சிலைகள் பூங்கா, மரத்தோட்டம், அல்லிகுளம், விளையாட்டு மைதானம், திறந்தவெளி அரங்கம் மற்றும் 1,500 மரங்கள் நடப்பட்டுள்ளன. அதேபோல் கண்காட்சி மேடைகள் என்று பல விதமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் பார்வையாளர்களை கவருகின்ற வண்ணம் இந்த பூங்கா உருவாக்கப்படும்.

அதேபோல் முடிச்சூர் ஆம்னி பஸ் நிலைத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். ஒரே நேரத்தில் 150 பஸ்கள் நிற்க கூடிய அளவுக்கு ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்