நெல்லையில் கொலை சம்பவங்கள்... மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 35 கொலைகள் நடந்துள்ளன என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2025-01-03 12:14 GMT

நெல்லை,

நெல்லை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு 35 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளன. இது கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடும் போது குறைவாகும். கொலை வழக்கில் தொடர்புடைய 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 69 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 2024-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான கொலை ஏதும் நடக்கவில்லை. மேலும் நடக்க இருந்த 17 கொலை சம்பவங்கள் தடுக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 100 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் குழந்தைகளுக்கு எதிரான 8 குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கஞ்சா விற்பனை செய்ததாக 259 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 65 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் 46 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் குட்கா வழக்குகளில் 351 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 917 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 11 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டை ஒப்பிடும் போது கடந்த ஆண்டு 20 சதவீதம் விபத்துகள் குறைந்து உள்ளன. மேலும் 18 சதவீதம் விபத்து மரணங்கள் குறைந்து உள்ளன. கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 249 பிடியாணைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து தலைமறைவாக இருந்த 2 பேர் கைதானது குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களில் இருபிரிவினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் பதிவுகள் செய்த 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்