முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாவுடன் செல்ல அனுமதி மறுப்பு - அண்ணாமலை கண்டனம்

முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் கருப்பு துப்பட்டாக்கள் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-01-05 12:09 GMT

சென்னை,

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கருப்பு நிற துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடம் 'கருப்பு நிற உடை அணியக்கூடாது' எனக்கூறி அதை பாதுகாப்பு பிரிவு போலீசார் வாங்கி வைத்துக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதித்தனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னரே துப்பட்டாக்கள் உரிய மாணவிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கருப்பு நிற கைப்பைகள், குடை போன்றவையும் வாங்கி வைக்கப்பட்டு, நிகழ்ச்சி முடிந்த பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் துப்பட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க. லைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ள அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில், "கருப்பு துப்பட்டா" அணிந்திருந்த மாணவிகள் அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன்பு அவற்றை அகற்றிவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குள்ளே பயம் நுழைந்துவிட்டது. என்ன செய்வது என்று அறியாமல் நம்பிக்கையற்றவர்களாக மாறிவிட்டனர். இது என்ன வகையான எதேச்சதிகாரம்?" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்