ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் மத்திய மந்திரியும், டி.என்.பி.சி.சி. முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அச்சமற்ற மற்றும் கொள்கை ரீதியான தலைவர், அவர் காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் மற்றும் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஒரு உறுதியான நடுநிலையாளராக இருந்தார். தமிழ்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு சேவை என்றென்றும் உத்வேகமாக இருக்கும்.
என்று அதில் தெரிவித்துள்ளார்.