எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களை கடந்து செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவை முறையாகச் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, பணிகளை நிறைவேற்றிடும் ஜனநாயக மாண்புமிக்கது நம் திராவிட மாடல் ஆட்சி.
இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது. அந்த முகமலர்ச்சியானது அவர்களின் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியின் மொழிபெயர்ப்பு.
கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக ஆட்சிக்காலத்தில் பத்தாண்டு காலம் கிடப்பில் போட்டுவிட்டதையும், நம்முடைய அரசு வந்தபிறகு அந்தத் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு 40 சதவீத அளவுக்குப் பணிகள் நிறைவேறியிருப்பதையும் கூறித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதலமைச்சரான எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது.
இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான திட்டங்களும், கட்டிடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார்.
கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை. தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அரசியல் சட்டம் வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான். இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன்.
வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு அரசியல்ரீதியாக எந்தச் சிக்கலும் நெருக்கடியும் வராதபடி தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை அமைந்துள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.