31-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஆங்கில வருட பிறப்பை வரவேற்கும் வகையில், ஆஸ்திரேலியா நாடுகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இசை திருவிழாக்கள் நடத்தியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நியூசிலாந்து நாட்டை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் வருட பிறப்பு களை கட்டியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமையையேற்ற ரஷியா, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி வெளியிட்ட செய்தியில், 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்தும் இணையும் என உறுதிப்படுத்தி இருந்தது. இதன்படி, தாய்லாந்து நாடு நாளை முதல் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இணைகிறது.
இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி
தஞ்சை,
திருவாரூர்,
நாகை,
மயிலாடுதுறை,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
தென்காசி,
நெல்லை,
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாற்றியுள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் புது வருடம் பிறந்தது. அதற்கான கொண்டாட்டமும் தொடங்கியது. ஆங்கில வருட பிறப்பை முதலில் வரவேற்கும் நாடுகளில் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இசை திருவிழாக்கள் நடத்தியும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தினமும் அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஊடகங்களில் செய்தியாக்குவதை ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது. இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை பெண்களிடம் உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார் எனத் தோன்றுகிறது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நள்ளிரவு நடைபெறும் புது வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 3 மணிநேரத்திற்கு முன் ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது - பாலச்சந்திரன் தகவல்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், “தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் இயல்பை விட 33 சதவீதம் அளவுக்கு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு காலத்தில் பருவமழை 590 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழகத்தில் பெஞ்சல் புயலை ஒட்டி டிசம்பர் 11-ம் தேதிமுதல் 14-ம் தேதி வரை அதிகனமழை பெய்துள்ளது. நெல்லை, சேலம், தருமபுரி, திருபத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக மழை பதிவானது. 2024-ல் 4 புயல்கள் ஏற்பட்டன. கடந்த ஆண்டைவிட இம்முறை 143 மி.மீ. மழை அதிகம். 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1,179 மி.மீ. மழை பதிவானது.
வடகிழக்கு பருவமழை நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்” என்று அவர் தெரிவித்தார்.