அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக வழக்கு: பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண்ணுக்கு முன்ஜாமீன் மறுப்பு
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. அப்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் உள்ள கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் பொன்முடி மீது சிலர் சேற்றை எடுத்து வீசினர். இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லூர் போலீசார், இருவேள்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விஜயராணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு விஜயராணி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் மீது சேற்றை வீசிய சம்பவத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்தேன் என்பதற்காகவும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்பதாலும் என்மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் சந்தோஷ் ஆஜராகி, ''மனுதாரர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். இவர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் கிடையாது. அரசியல் உள்நோக்கத்துடன் இவரது தூண்டுதலின் பேரில் அமைச்சர், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீதும் சேறு வீசப்பட்டுள்ளது. அதனால், இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது'' என்று வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.