விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் ஏன் தாமதம்? - தமிழிசை கேள்வி
2026 தேர்தலை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.;
சென்னை,
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
கார் ரேசுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், விஜய் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தாமதம் ஏன்? மாநாடு நடத்தவிடாமல் விஜய் கட்சியை தி.மு.க. அரசு முடக்குகிறது. மாநாடு நடத்த இடம் கொடுப்பதில் தி.மு.க. அரசுக்கு என்ன பிரச்சினை? இதற்காக நான் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேன் என்று கிடையாது. நடிகர் விஜய் பாவம். ஒவ்வொரு முறையும் மாநாட்டுக்கான இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
விஜய் மீது தி.மு.க.வுக்கு ஏன் அவ்வளவு பயம்? மாநாடு நடத்த இடத்தை கொடுத்தால், மடத்தை பிடித்து விடுவார் என்று தி.மு.க. பயப்படுகிறது. விஜய்க்கு ஆதரவாக நாங்கள் செயல்படவில்லை. ஒரு புதிய கட்சி வரும்போது அதை ஆதரிப்போம். நாங்கள் அனைவரும் களத்தில் இருக்கிறோம். யாருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். எதிர்க்கட்சிகளை தி.மு.க.அரசு முடக்க நினைக்கிறது. 2026 தேர்தலை பார்த்து தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சிகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.