3 வயது மகனை ஏரியில் வீசிய தந்தை அதே ஏரியில் குதித்து தற்கொலை: காரணம் என்ன..?

போரூர் ஏரி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மோகன்ராஜ், திடீரென தனது மகனை ஏரியில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Update: 2024-06-03 23:33 GMT

போரூர்,

சென்னை தலைமை செயலக காலனியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது 35). சிவில் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 3 வயதில் தர்சன் என்ற மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மோகன்ராஜ், மனைவியை வீட்டின் அறைக்குள் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டினார்.

பின்னர் தனது மகன் தர்சனுடன் மோட்டார் சைக்கிளில் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்தார். போரூர் ஏரி மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிளை நிறுத்திய மோகன்ராஜ், திடீரென தனது மகன் தர்சனை, போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

அப்போது ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர், ஏரியில் வீசப்பட்ட தர்சனை உயிருடன் மீட்டு போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில்தான் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது.

இதுபற்றி அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், பிரியாவுடன் போரூர் போலீஸ் நிலையம் வந்தனர். பிரியாவிடம் மீட்கப்பட்ட தர்சனை போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்ற மகனை, ஏரியில் வீசிவிட்டு தலைமறைவான கல் நெஞ்சம் படைத்த தந்தையை தேடி வந்தனர்.

தந்தை தற்கொலை

இந்தநிலையில் போலீசார் தேடிவந்த மோகன்ராஜ், மகனை வீசிய அதே போரூர் ஏரியில் நேற்று காலை பிணமாக மிதந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியுடனான தகராறில், ஆத்திரத்தில் பெற்ற மகனையே ஏரியில் வீசி விட்டோமே என்ற மன உளைச்சலில் நேற்று முன்தினம் இரவே மோகன்ராஜ், ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவரிடம் அப்போது செல்போன் இல்லை என ெதரிகிறது. இதனால் ஏரியில் வீசிய தனது மகன் உயிருடன் மீட்கப்பட்டது தெரியாமல், ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என கருதி மகனை வீசி சென்ற அதே வேகத்தில் மீண்டும் அங்கு வந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

போரூர் ஏரி மேம்பாலத்தில் நின்றிருந்த அவரது மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். ேமலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்