ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வக்கீலை கைது செய்தது தனிப்படை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 5 வக்கீல்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;
சென்னை,
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ரவுடியான திருவேங்கடம் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக கடந்த 14-ந் தேதி மாதவரம் பகுதிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டதில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
இதனிடையே கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொலைக்கு மேலும் பலர் பின்னணியில் இருந்து செயல்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. மேலும், கொலைக்கு எவ்வளவு பணம் கைமாறியது? யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் த.மா.கா பிரமுகர் ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்போ செந்தில் என்ற பிரபல ரவுடிக்கு கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கொலைக்கு பண உதவி செய்தது சம்போ செந்தில் தான் என்பதும், ஹரிஹரன் மூலமாக அந்த பணம் ஏற்கனவே கைதான அருளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பணத்தை பிரித்து சிலருக்கும் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வக்கீலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்படி திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வக்கீலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வக்கீல் சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில், கைது செய்யப்பட்ட வக்கீல் சிவா மூலம் கொலையாளிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வக்கீல் சிவா வீட்டில் இருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரவுடி சம்போ செந்திலுடன் வக்கீல் சிவா தொடர்பில் இருந்ததால் அவரை பிடித்து விசாரித்தபோது பணப்பரிவர்த்தனை விவகாரம் தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 5 வக்கீல்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.