மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது

Update: 2024-08-16 12:05 GMT

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 30-ந் தேதி மாலை 6 மணிக்கு இந்த ஆண்டில் முதன்முறையாக மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது.

மேலும் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக அணையில் இருந்து உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு சில நாட்களில் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டு டெல்டா பாசன தேவைக்கு மட்டும் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பது நிறுத்தப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர்மின் நிலையங்கள் வழியாக மட்டும் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்