விதிகளை மீறி இயக்கப்பட்ட 3 வெளிமாநில ஆம்னி பஸ்கள் பறிமுதல்

கோவையில் விதிகளை மீறி இயக்கிய வெளி மாநில பதிவெண் கொண்ட 3 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

Update: 2024-06-20 04:03 GMT

கோவை,

தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் என்ற பெயரில் இயக்கப்படும் அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வெளிமாநில பதிவெண் கொண்ட பஸ்களை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி மறுத்தது. இதை தொடர்ந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர்களுக்கு 18-ந் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் அந்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. எனவே தமிழகத்தில் விதிகளை மீறி இயக்கப்படும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிகள் பயணம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதுபோன்று விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இதைதொடர்ந்து சென்னை போக்குவரத்துத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், கோவை இணை ஆணையர் மேற்பார்வையில் கோவையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கோவையில் 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கிய நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட 2 பஸ்கள் வந்தன. உடனே அதிகாரிகள் அந்த பஸ்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்ற பஸ் என்பதும், விதிகளை மீறி மாநிலத்துக்குள் இயக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்தனர். அதுபோன்று கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட மற்றொரு பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த 3 பஸ்களும் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்