நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது - த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறினார்.

Update: 2024-07-03 04:42 GMT

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதலிடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார். இந்நிலையில், இந்த வருடமும் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார்.முதற்கட்டமாக, கடந்த 28ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது . கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை விஜய் வழங்கினார். இந்த நிகழ்வில், 750 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிலையில்,2ம் கட்டமாக இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது,

நீட் தேர்வால் பல்வேறு மாணவ , மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இருக்க வேண்டும்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் விலக்கு கோரும் தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது.மாநில கல்வியில் பயின்றுவிட்டு தேசிய கல்வியில் தேர்வு எழுத சொல்வது அநீதி.  நீட் தேர்வில் உள்ள மூன்று பிரச்சனைகள் என்னவென்றால் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது.1975-க்கு முன்னால் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன்பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது. இரண்டாவது ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி திட்டத்தில் தேர்வு வைப்பது, குறிப்பாக மருத்துவ படிப்புகளுக்கு வைப்பது கடினமான ஒன்று.

மூன்றாவது, நீட் குளறுபடி நடந்தது அனைவருக்கும் தெரியும். இதன்மூலம் நீட் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் இழந்துவிட்டது. நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். காலதாமதம் செய்யாமல் ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.நிரந்தர தீர்வாக பொதுப் பட்டியலில் இருந்து கல்வியை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும். என தெரிவித்தார்,

Tags:    

மேலும் செய்திகள்