கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
சென்னை,
மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருணாநிதி நூற்றாண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
விழாவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. மேலும் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில், கருணாநிதி 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவை முன்னிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, சென்னையில் ஐ.என்.எஸ். அடையாறு கடலோர காவல்படை வளாகத்திற்கு சென்ற அவர், புதிதாக கட்டப்பட்டுள்ள கடல்சார் மீட்பு, ஒருங்கிணைப்பு மைய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.