ரவுடிகள் கலாசாரத்தை ஒடுக்கவேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை திருவொற்றியூரில் பெண் பழ வியாபாரி மாமூல் தர மறுத்ததாக கூறி கொடூரமாக கொலை செய்த ரவுடி, அதனை தடுக்க முயன்ற பெண்ணின் கணவரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அதிகரித்துவரும் ரவுடிகள் கலாசாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்தவேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால், பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப்பொருட்களின் தாராள புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்து, பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு, நிர்வாகத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாசாரத்தை ஒடுக்கவேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.