"தாய் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்..' - டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷின் தாய்
டாக்டரை கத்தியால் குத்தியது தெரியாது என்றும், என் மகன் செய்தது தவறுதான் என்றும் விக்னேஷின் தாயார் பிரேமா தெரிவித்துள்ளார்.;
தாம்பரம்,
சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷின் தாயார் பிரேமா, "கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது எனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. டாக்டர் பாலாஜி எப்பொழுதும் அவ மரியாதையாக பேசுவார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூட பார்க்க மாட்டார். விக்னேஷ் என்னுடன் இருந்து என்னை கவனித்துக்கொண்டான்.
டாக்டர் பாலாஜிக்கும் எங்களுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. என் தாயின் நுரையீரல் பாதிப்பு குறித்து ஏன் சொல்லவில்லை என்பதே என் மகனின் ஆதங்கம். அவர் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. தாய்ப் பாசத்தில் செய்து விட்டான். அவனும் இருதய நோயாளி. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன்.
எனக்கு புற்றுநோய் இரண்டாவது நிலையில் இருந்தபோது சிகிச்சைக்கு சென்றேன். ஆனால் எனக்கு 5-வது நிலைபுற்றுநோய் இருந்ததாக வதந்திபரப்பப்படுகிறது. வீட்டை காவல் துறையினர் சோதனையிட்டு, என்மருத்துவ ஆவணம், என் மகனின் சில ஆவணங்கள் உள்ளிட்ட வற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் எனக்கு சுவாசக்கோளாறு அதிகமானதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். நான் உயிர் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் சொன்னார்கள். டாக்டரை அவன் கத்தியால் குத்தியது எனக்கு தெரியாது. அது தவறுதான். என் மேல் இருக்கும் பாசத்தால் நான் படும் அவஸ்தையால் இந்த முடிவை எடுத்திருக்கிறான். அவனுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான சிகிச்சை அளிக்காததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசக்கோளாறு ஏற்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.