தமிழகத்தை உலுக்கிய துயரம்.. விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-06-20 11:01 GMT

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. நேற்று காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

நேற்று இரவு நிலவரப்படி 18 பேர் பலியான நிலையில், இன்று காலையில் மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 35 ஆக அதிகரித்தது. இன்று பிற்பகல் மேலும் 5 பேர் சிகிச்சை பலனினிறி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், பாக்கெட் சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்