தமிழ்நாட்டுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

மத்திய அரசு, மாநில உரிமைகளை பறித்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை வெளிப்படுத்தியிருக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-08-31 18:14 GMT

கோப்புப்படம் 

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த மத்திய அரசு மாநில உரிமைகளை பறித்து மையத்தில் அதிகாரத்தை குவித்து கொள்ளும் ஏதேச்சதிகார வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.க. மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்த்து போராடி வருகிறது. இந்த நிலையில் பா.ஜ.க. மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகம் சமக்ரா சிக்ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

இந்த சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை நிறுத்தி வைத்து, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி ஒதுக்க முடியாது என மிரட்டி, நிர்பந்திக்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், "பிரதமரின் எழுச்சி மிக்க இந்தியப் பள்ளிகள்" என்ற திட்டத்தை அறிமுகம் செய்து. இதன் வழியாக இந்தி மொழியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. மேலும் மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் தேசிய கல்விக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது அரசின் கருத்து மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கருத்தாகும்.

இதன் காரணமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய தலைமை மந்திரியான பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். முதல்-அமைச்சரின் கடிதத்தை நேர்மறையாக பரிசீலித்து, உதவாமல் மத்திய அரசின் கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் முதல்-அமைச்சரின் கடிதத்துக்கு விளக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை பறித்து, இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை வெளிப்படுத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்