3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-07-14 07:46 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஜூலை 14,15,16 ஆகிய 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், வரும் 15, 16 ம் தேதிகளில் சில இடங்களிலும், வரும் 17 முதல் 19 ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 16 ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு, ஜூலை 14 முதல் 16-ம் தேதி வரை கனமழை பெய்வதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்