தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கம்
தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமனை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் உள்பட இதுவரை 22 பேர் கைதாகி உள்ளனர்.
இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ்நாடு இளைஞர் காங்கிரசில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து அஸ்வதாமன் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார் என்பதை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
எங்கள் கட்சியின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணானதாகக் கருதப்பட்ட அவரது நடவடிக்கைகளைத் தொடந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரசானது அதன் அணிகளுக்குள் ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதில் உறுதியாக உள்ளது.
அமைப்பின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அனைத்து உறுப்பினர்களும் நமது நடத்தை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.