50 சதவீத பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு: முதல்-அமைச்சர் ஆணை

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 50 சதவீத பேருந்துகளுக்கு வரவு - செலவு வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-08-22 16:32 GMT

சென்னை,

உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாநகர் போக்குவரத்துக் கழகத்தை (MTC) உலகத்தரம் வாய்ந்த பொதுப் போக்குவரத்து அமைப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதியுதவியுடன் சென்னை நகர கூட்டாண்மைத் திட்டம் (CCP) செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு இடையே 20.10.2023 அன்று பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பந்தம் (Public Transport Service Contract PTSC) கையெழுத்தானது. இதன்மூலம், பேருந்து இயக்கத்தில் முக்கிய செயல்திறன் குறியீடுகளை (KPI) உறுதி செய்து, அதன் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஏற்ப வரவிற்கும் செலவிற்குமான வித்தியாசத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கும்.

பொதுப் போக்குவரத்து சேவை ஒப்பத்தத்தின்படி முதலாவது ஆண்டு 2023- 2024-இல் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 10 சதவிகிதம் பேருந்துகளுக்கு வரவிற்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக ரூ.21.50 கோடி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது ஆண்டு 2024 - 2025 இல் பொதுப் போக்குவரத்து சேவைகள் ஒப்பந்தத்தின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவிகிதம் பேருந்துகளுக்கு வரவிற்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகை நிதியாக (VGF) ரூ.300 கோடி மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதன்மூலம், போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பராமரிப்பு. எரிபொருள் மற்றும் இதர செலவுகள் ஈடு செய்யப்பட்டு, நாள்தோறும் சுமார் 35 லட்சம் பயணிகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சேவையினை சிறப்பான முறையில் பயன்படுத்திட உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்