சட்டசபையில் கலவரத்தை ஏற்படுத்த அதிமுக முயற்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பிரதான எதிர்க்கட்சி அதிமுக அவையில் இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-06-25 04:56 GMT

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் நடைபெற்றுவரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இரு நாட்களாக கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், இரு நாட்களாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். விஷ சாராய விவகாரம் தொடர்பாக நேற்றைய அவை நடவடிக்கைகளை முழுமையாக புறக்கணித்த அதிமுக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில், இன்றைய சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்திலும் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதையடுத்து அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். மேலும் இன்று ஒரு நாள் பேரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தடை விதித்தார்.

இதனை தொடர்ந்து சட்டசபையில் அதிமுகவினரின் நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 20-ம் தேதி ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் இந்த அவையில் விரிவாக பேசினார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன். 

அன்றைய தினம் அவையில் இருந்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது கருத்தை பதிவு செய்திருக்கவேண்டும்; மாறாக தேவையற்ற பிரச்சினையை அவை கூடியதும் கிளப்பினார்கள். அவையின் விதிமுறைபடி கேள்வி நேரம் முடிந்ததற்கு பிறகுதான் மற்ற பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவையின் விதிமுறைகளை மீறி ரகளையை செய்கிறார்கள்.

கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்துதான் விவாதிக்கபோகிறோம் என்று சபாநாயகர் கூறியும், அதைமீறி சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடுகின்றனர். மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அவையில் இருக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலில் 40/40 வெற்றி அதிமுக கண்களை உறுத்துகிறது; மனதை உறுத்துகிறது. அதை மக்களிடத்திடம் இருந்து எப்படி மாற்றுவது என்பதற்காக திட்டமிட்டு திசை திருப்ப இது போன்ற பிரச்சினைகளை அதிமுகவினர் கிளப்புகின்றனர். மீண்டும்.. மீண்டும் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் அதிமுக செயல்படுகிறது.

அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை குறை கூறவில்லை. ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது. தனக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்கக்கூடாது என தடை வாங்கியவர்தான எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்