வீட்டில் இருந்த பெட்ரோல்: மதுபோதையில் இருந்த நபர்... அடுத்து நடந்த விபரீதம்

வீட்டில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்ததில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்;

Update:2024-07-17 06:48 IST

அழகர்ராஜா, சின்ன கருப்பு, முத்துக்குமார்

கோவை,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கடமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 30). இவர் கோவையில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக இவர் கோவை அருகே முத்துகவுண்டன் புதூர் சோமனூர் பிரிவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

அவருடன் அதே ஊரை சேர்ந்த முத்துக்குமார் (24), தினேஷ்குமார், பாண்டீஸ்வரன், வீரமணி ஆகியோர் தங்கி இருந்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு கோவை வாகராயம்பாளையத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த தேனியை சேர்ந்த நண்பர்களான சின்னகருப்பு என்ற கருப்புசாமி (26), மனோஜ் ஆகியோரும் வந்து தங்கினர்.

இதில் அழகர்ராஜா, முத்துக்குமார், தினேஷ்குமார், வீரமணி, பாண்டீஸ்வரன் ஆகிய 5 பேரும் டேங்கர் லாரி டிரைவர்கள். இவர்கள் இருகூரில் உள்ள எண்ணெய் கிடங்குகளில் இருந்து பெட்ரோல், டீசலை டேங்கர் லாரிகளில் கொண்டு செல்வது வழக்கம். அப்போது அவர்கள், மீதமாகும் பெட்ரோல், டீசலை சேகரித்து வீட்டில் வைத்து இருந்ததாக தெரிகிறது. அழகர்ராஜா நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்ததாக தெரிகிறது.

மது போதையில் இருந்த அழகுராஜா, இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக வீட்டிலிருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனை எடுத்து எரியும் கியாஸ் அடுப்பின் அருகே வைத்து ஒரு லிட்டர் கேனுக்கு மாற்றி உள்ளார். அப்போது பெட்ரோல் சிதறி கீழே கொட்டியது.

மேலும் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீயில் பெட்ரோல் தெறித்ததால் குபீரென தீப்பிடித்தது. இந்த அதிர்ச்சியில் பெட்ரோல் கேனை கீழே போட்டபோது அந்த அறை முழுவதும் குபீரென தீப்பிடித்து கொண்டது. இதில் அறைக்குள் இருந்த 7 பேரும் உள்ளே சிக்கி கொண்டனர். உடலில் தீப்பற்றி எரிந்ததில் வேதனை தாங்காமல் அலறினர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் சூலூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

ஆனால் அழகர்ராஜா, சின்னக்கருப்பு, முத்துக்குமார் ஆகிய 3 பேரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாண்டீஸ்வரன், தினேஷ்குமார், வீரமணி, மனோஜ் ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தினேஷ்குமார், மனோஜ், வீரமணி ஆகியோருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்