பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தாலும் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

Update: 2024-10-23 12:13 GMT

புதுடெல்லி,

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பிற நாடுகளுக்கான விநியோகமும் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அத்தகைய சூழல் ஏற்பட்டால் அனைத்து நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்காக உயரும் அபாயம் உருவாகும். இந்தச் சூழலில், 'பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது' என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், புவிசார் அரசியலில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றபோதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது. எனவே, தடையற்ற கச்சா எண்ணெய் வினியோகம் குறித்து கவலைப்படத் தேலையில்லை. மேலும். கடந்த காலங்களைப்போல், மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் இந்தியா திறம்பட எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு. வரும் நாட்களில் விலை குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்